’க்யூ எஸ்’ உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்.. முதல் 200 இடங்களுக்குள் சென்னை ஐஐடி
Education
June 19, 2025

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 54 உயர்கல்வி நிறுவனங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை ஐஐடி 180ஆவது இடத்தை பிடித்துள்ளது.
க்யூ எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின் பல முக்கிய பணிகள், கல்வியாண்டு தேர்ச்சி விகிதம், நற்பெயர், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட 6 செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இதுவரை இல்லாத அளவில் இந்தியக் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 46 இந்தியக் கல்வி நிறுவனங்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டில் 45 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்த நிலையில், இந்த ஆண்டு 54 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
குறிப்பாக டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 123 இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 118ஆவது இடத்தில் இருந்த மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் இந்த ஆண்டு 129ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி இந்த ஆண்டு 47 இடங்கள் முன்னேறி 180ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஐஐடி கராக்பூர் 215ஆவது இடத்திலும், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பல்கலைக்கழகம் 219ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 465 இடத்தில் உள்ளது.
இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது எக்ஸ் பக்கத்தில், “உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் 54 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், QS உலகப் பல்கலைக்கழக 2026 தரவரிசையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டு இந்தியாவில் வெறும் 11 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருந்த நிலையில், சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் இது 54 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஐந்து மடங்கு உயர்வு, கடந்த தசாப்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மாற்றத்தக்கக் கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஒரு சான்றாகும். புதிய கல்விக் கொள்கை 2020 நமது கல்வி நிலப்பரப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், அதில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
G20 நாடுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் கல்வி முறையாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனாவுக்குப் பிறகு நான்காவது இடத்தில் உள்ளது என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். ஆராய்ச்சி, புதுமை மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் புதிய கல்விக் கொள்கையின் உந்துதலுடன், வரும் காலங்களில் அதிகமான இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் உலகளாவிய சிறப்பை அளவிடும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் இந்தப் பதிவுக்கு பதில் பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “QS உலகப் பல்கலைக்கழகம் 2026 தரவரிசை நமது கல்வித் துறைக்கு சிறந்த செய்திகளைக் கொண்டுவருகிறது. இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கு நமது அரசு உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.